ACUSIDDHA developed by Dr.V.Pandikumar MBA, MD (Acu)

Friday, October 8, 2010

அகத்திக்கீரை - Sesbania grandiflora


அகத்திக்கீரை - Sesbania grandiflora

வெற்றிலைக்கொடி படர்வதற்காகக் கொடிக்கால்களில் பயிரிடப்படும் சிறு மென்மையான மர வகை அகத்தி. தமிழ்நாடு எங்கும் வளர்க்கப்படுகிறது. கீரை, பூ, பிஞ்சு ஆகியவை சமைத்து உண்ணப்படுகின்றன. இலை, பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. பொதுவாக வெப்பு அகற்றியாகவும், கீரை மலமிளக்கியாகவும், வேர் உடல் தரும் மருந்தாகவும் பயன்படுகிறது.
அகத்தியில் இருவகையுண்டு, வெள்ளைப் பூ உடையது அகத்தி என்றும், செந்நிறப் பூவுடையது செவ்வகத்தி எனப்படும்.
வேறு பெயர்கள்: அச்சம், முனி, கரீரம், சாழை அகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி,
ஆங்கிலத்தில்: Sesbania grandiflora
அகத்திக்கீரையின் மருத்துவக் குணங்கள்:
அகத்திக் கீரையை வாரம் ஒருமுறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பம், மலச்சிக்கல், காபி, டீ, ஆகியவற்றைக் குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும். அகத்தி மரப்பட்டை, வேர்ப்பட்டை வகைக்கு கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மி.லி.யாகச் சுண்டக்காய்ச்சி வடிகட்டி 100 மி.லி. அளவு இருவேளை குடித்து வர காய்ச்சல், தாகம், கைகால் எரிச்சல், மார்பு எரிச்சல், உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிவு, அம்மைக் காய்ச்சல் குணமாகும்.
அகத்தி இலைச்சாறும், நல்லெண்ணெய்யும் வகைக்கு 1 லிட்டர் கலந்து பதமாகக் காய்ச்சி வடிப்பதற்கு முன்பு கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கிச்சிலிக்கிழங்கு, விளாமிச்ச வேர் வகைக்கு 20 கிராம் பொடி செய்து போட்டுக் கலக்கி வடிகட்டி வாரம் ஒருமுறை தலையிலிட்டுக் குளித்துவரப் பித்தம் தணிந்து தலைவலி நீங்கும். கண்கள் குளிர்ச்சிபெறும்.
சிறிது உப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்ட இக்கீரையை வேறு மருந்துகள் உண்ணும் காலங்களில் உண்ணக் கூடாது. ஏனெனில் மருந்துகளின் வீரியத்தை அகத்திக் கீரை குறைக்கவும் அழித்துவிடவும் செய்யும்.
இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தம் கெட்டுப் போகும் வாய்ப்புண்டு. சொறி, சிரங்கும் தோன்றலாம். இரத்தம் குறைந்து இரத்த சோகை ஏற்படலாம். வயிற்று வலியும் பேதியும் உண்டாகலாம்.
காய்ச்சல் நேரத்தில் இக்கீரையைப் பிழிந்து அதன் சாற்றில் இரு துளி மூக்கில் விட்டால் காய்ச்சல் நீங்கும். அகத்தி இலைச் சாற்றை நெற்றியில் தடவி நெற்றியை இலேசாக அனலில் காண்பிக்க கடுமையான தலைவலி நீங்கும்.சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ நிறைய உள்ளது. போதுமான பால் சுரக்காத தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட நன்கு பால் சுரக்கும். இக்கீரை சமைக்கும்போது நன்றாக வேக வைத்து உண்ண வேண்டும். வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் சக்தி இக்கீரைக்கு உண்டு. மலச்சிக்கல் நீங்கும்.
குழந்தைகளுக்கு நீர் கோர்த்துக் கொண்டால், இக்கீரையின் சாற்றை ஐந்துக்கு ஒரு பங்கு தேன் கலந்து தலை உச்சியில் தடவினால் நீர்க்கோவை மறையும். அகத்தியிலையை அவித்து அரைத்துக் காயங்களுக்கு கட்ட விரைவில் ஆறும். அகத்திப் பூச்சாறை கண்களில் பிழிய கண்நோய் குணமாகும்.
அகத்தி வேர்ப்பட்டை, ஊமத்தன் வேர் சம அளவாக எடுத்து அரைத்து வாதவீக்கத்திற்கும், கீல் வாயுக்களுக்கும் பற்றிட குணமாகும். இது வாயுவை உண்டாக்கும் இயல்புடையது. எனவே வாய்வுக் கோளாறு உள்ளவர்கள் இக்கீரையை உண்ணக் கூடாது.

No comments:

Post a Comment