ACUSIDDHA developed by Dr.V.Pandikumar MBA, MD (Acu)

Thursday, October 7, 2010

செம்பருத்தி -Hibiscus

செம்பருத்தி -Hibiscus
தோட்டங்களில் அழகுச் செடியாகவும், வேலித் தாவரமாகவும் வளர்க்கப்படுகிறது. பசுமை நிறத்துடன் கூடிய தடித்த புதர்ச் செடி பல நிற மலர்களைக் கொண்டது. பூக்கள் தனித் தனியாகவும், அடுக்காகவும் காணப்படுகிறது. சிவப்பு ஐந்து இதழ்கள் கொண்ட நாட்டு செம்பருத்தி பூவே சிறந்தது.இத்தாவரங்களில் அமிலங்கள், குளுக்கோசைடுகள், ரிபோபிளேவின், கரோட்டின் என பல வேதிப் பொருட்கள் காணப்படுகின்றன.மைசூர், பெங்களூர் போன்ற இடங்களில் அதிகமாகக் காணப்படுகிறது.இலைகள், பூக்கள் மிகுந்த மருத்துவ பயன்கள் தருபவை. இலைகள் தசைவலியைப் போக்குவதோடு தசையை மிருதுவாக்கும் தன்மையும் கொண்டவை. வழுவழுப்பான தன்மை கொண்ட இலையின் சாறு தலைவழுக்கை மற்றும் கூந்தலைக் கறுப்பாகவும் உதவுகிறது. மலர்கள் குளிர்ச்சி பொருந்தியவை. சருமத்திற்கு இதமும், சுகமும் அளிப்பவை. மாதவிடாயைத் தூண்டக் கூடியது.இதழ்களின் வடிசாறு காய்ச்சலில் வெம்மை போக்கும். சிறுநீர்ப் போக்கு வலியை நீக்கும். இனப்பெருக்க உறுப்பு நோய்களுக்கும் மருந்தாகிறது. பூவின் இதழ்களை ஆலிவ் எண்ணெயுடன் கலந்து தடவ வழுக்கைக்கு நிவாரணமளிக்கிறது. கூந்தல் வளாச்சிக்கான தைல தயாரிப்பில் இலைகளும், பூக்களும் பெரும் பங்கு வகிக்கிறது.காலை எழுந்ததும் 5 முதல் 6 பூக்களின் இதழ்களை மென்று தின்று சிறிது நீர் அருந்தி வர வயிற்றுப்புண் ஆறும். வெள்ளைப் படுதல் நிற்கும். இரத்தம் சுத்தமாகும். இதயம் வலுப்பெறும். தலை முடி உதிர்தல், புழுவெட்டு, இளநரை, செம்பட்டை முடி, இளவயதில் ஏற்படும் வழுக்கை இவற்றிற்கான தைலம் இப்பூக்களிலிருந்து தயாரிக்கலாம்.400 மில்லி நல்ல எண்ணெயில் 100 கிராம் செம்பருத்தி இதழ்களைப் போட்டு கலந்த பாத்திரத்தை மெல்லிய துணியால் மூடிக் கட்டி பத்து நாட்கள் வெயிலில் வைத்து காலை - மாலை எண்ணெயை கலக்கிவிட்டு மூடவும். பிறகு எண்ணெயை வடிகட்டி சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து பத்திப்படுத்திக் கொண்டு தைலத்தை தினமும் தலையில் தேய்த்து தலை வாரி வரவும்.சிவப்பு பூக்கள் தான் மருத்துவச் சிறப்பு வாய்ந்தவையாகும். செம்பருத்திப் பூவில் தங்கச் சத்து உண்டு என்று மருத்துவ சாஸ்திரங்கள் கூறுகின்றன. இப்பூக்கள் இதயக் கோளாறையும், கர்ப்பக் கோளாறையும் நீக்க வல்லது. செம்பருத்திச் செடி வீட்டில் மருத்துவர் இருப்பதற்குச் சமம். பெண்கள் வீட்டுக்கு விலக்காகும் காலத்தில் அதிக உதிரப் போக்கு இருந்தால் இரண்டு, மூன்று மலர்களை நெய்யில் வதக்கிக் தின்பது குணப்படுத்தும். தினந்தோறும் அதிகாலையில் ஒன்றிரண்டு மலர்களைத் தின்று வந்தால் பருவம் அடையாத பெண்கள் பருவமடைவார்கள். வழுக்கைத் தலையில் பூவின் சாற்றை தேய்த்தால் நாளடைவில் வழுக்கை மறையும்.ஒற்றையினப் பூவோடு, பொடுதலை, கோரைக் கிழங்கு, மருதாணி இலை சேர்த்து இடித்து தலையைச் சுத்தம் செய்து பூசி வந்தால் கூந்தல் வளர்வதோடு முடியும் கறுப்பாகும். உடல் குளிர்ச்சி பெற்று மயிர் உதிர்வது தடுக்கப்படும். ஒற்றைச் செம்பருத்திப் பூ, மருதாணி இலையுடன், பத்து மிளகு சேர்த்து மைபோல அரைத்து நரைமுடி உள்ளவர்கள். முடி கொட்டியவர்கள், கண் மயிரிலர் பூச்சி வெட்டியவர்களை தேய்த்து வந்தால் நல்ல பலன் கிட்டும்.காய்ந்த மலர் இதழ்கள், வெட்டி வேர், துளசி விதைகளை, சுத்தமான தேங்காயெண்ணெயில் ஊறவைத்து தலைக்குத் தேய்த்து வர பேன், பொடுகு அகலும்.

No comments:

Post a Comment