கீழாநெல்லி
மஞ்சள்காமாலை குணமாக கீழாநெல்லி!
கீழாநெல்லியின் இலைகள் சிறியவை, கூட்டிலை வடிவம் கொண்டவை. இரு வரிசைகளாக இலைகள் அமைந்திருக்கும். இலைகளை தாங்கிப் பிடிக்கும் முக்கிய நடு நரம்பின் கீழ்ப்பாகம் முழுவதும் கீழ்நோக்கிய பசுமையான சிறு பூக்களும், காய்களும் தொகுப்பாக காணப்படும். இதனாலேயே "கீழாநெல்லி" என்ற பெயர் இதற்கு வந்தது.ஈரமான இடங்கள், வயல்வெளிகள் போன்ற இடங்களில் கீழாநெல்லியை காண முடியும். "கீழ்க்காய்நெல்லி", "கீழ்வாய்நெல்லி" போன்ற மாற்று பெயர்களும் இதற்கு உண்டு. கீழாநெல்லியில் அனைத்து பகுதிகளுமே மருத்துவத்தில் பயன்படுகின்றன. சமஸ்கிருதத்தில் "பூமியமலகி" என்று அழைக்கப்படும் இதில் பொட்டாசியம் மிகுதியாக காணப்படுகிறது. இனி... இதன் பயன்களை விரிவாக காண்போம்.
மஞ்சள்காமாலை, நீரிழிவு:
கீழாநெல்லியின் முழு தாவரத்தையும் பசுமையாக சேகரித்து நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதை நன்கு மை போல் அரைத்து, அதில் எலுமிச்சம் பழம் அளவிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அதை, 1/2 லிட்டர் வெண்ணெய் நீக்கிய மோருடன் கலந்து குடித்துவர வேண்டும். இந்த காலத்தில் உணவுக் கட்டுப்பாடு அவசியம். இவ்வாறு செய்து வந்தால் மஞ்சள்காமாலை, நீரிழிவை குணப்படுத்தலாம்.
பசுமையான கீழாநெல்லி தினமும் கிடைக்கப்பெறாதவர்கள், அந்த செடியை காய வைத்து, தூள் செய்து பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, அதில் 1/2 டீஸ்பூன், அளவு எடுத்து, தேவையான அளவு மோரில் கலந்து உட்கொண்டு வரலாம்.
உடல்சூடு:
கீழாநெல்லி அரைத்து பசும்பாலுடன் கலந்து காலை, மாலை ஆகிய இருவேளை தொடர்ந்து 3 நாட்கள் உட்கொண்டு வந்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி பெறும். விஷக்கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களை குணப்படுத்துவதற்கான மருந்தாகவும் இதை பயன்படுத்தலாம்.
வெள்ளைப்படுதல்:
ஒரு கைப்பிடி அளவு கீழாநெல்லி இலையை எடுத்துக்கொண்டு, அதை 2 டம்ளர் நீரில் இட்டு, பாதியாக சுண்டக்காய்ச்சி வடிகட்டிக் கொள்ள வேண்டும். அதை காலை, மாலை இருவேளைகள் சில நாட்கள் குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
வயிற்றுப்புண்:
ஒரு கைப்பிடி அளவு கீழாநெல்லி இலையை அரைத்து, ஒரு டம்ளர் மோரில் கரைத்து காலை வேளையில் குடித்து வர வயிற்றுப்புண் குணமாகும்.
காயங்கள் குணமாக:
தேவையான அளவு கீழாநெல்லி இலைகளை அரைத்து, உடல் காயங்களின் மீது வைத்துக் கட்டினால் விரைவில் அந்த காயங்கள் குணமாகும்.
சிறுநீர் எரிச்சல்:
முழு கீழாநெல்லி செடிகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நசுக்கி, அதை 2 டம்ளர் நீரில் இட்டு ஒரு டம்ளர் அளவுக்கு காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 2 வேளைகள் என்று 3 நாட்கள் இவ்வாறு செய்து வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் தீரும்.
கருப்பை பிரச்சினை:
நாட்டுப்புற மருத்துவ முறையில் கீழாநெல்லிவேரை வேப்பிலையுடன், காயவைத்து தூளாக்கி, பெண்களின் கருப்பை தொடர்பான பிரச்சினைகள் குணமாகவும், மலட்டுத்தன்மையை குணப்படுத்துவதற்கான மருந்தாகவும் மாதவிலக்கு நாட்களில் கொடுக்கிறார்கள்.
எலிக்கடி விஷம் குணமாக:
ஒரு பிடி கீழாநெல்லி இலைகளை எடுத்து, 100 மில்லி நல்லெண்ணெயில் இட்டு காய்ச்சிக் கொள்ள வேண்டும். அந்த எண்ணெயை கடிவாயில் தடவ வேண்டும். தொடர்ந்து 3 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் இவ்வாறு சாப்பிட வேண்டும். இதன்படி செய்து வந்தால் எலிக்கடி விஷம் குணமாகும்.
காமாலை நோய்க்கு:
கீழாநெல்லி இலை, கரிசலாங்கண்ணி, இலை, தும்பை இலையை சம அளவில் எடுத்து அரைத்து, பெரியவர்களுக்கு புன்னைக்காய் அளவும், இளைஞர்களுக்கு கழற்சிக்காய் அளவும், சிறுவர்களுக்கு சுண்டைக்காய் அளவும் பாலில் கலந்து 10 நாட்கள் தொடர்ந்து கொடுத்துவர வேண்டும். அந்த நாட்களில், சாப்பாட்டில் காரம், புளி நீக்கி பால், மோர் சோறும், அரை உப்புமாக சாப்பிட்டு வர வேண்டும். இதை பின்பற்றினால் காமாலை குணமாகும்.
முதுமை நீங்க:
ஓரிதழ் தாமரையுடன் சம அளவில் கீழாநெல்லியை எடுத்து, இரண்டையும் ஒன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதில் நெல்லிக்காய் அளவு எடுத்து அதிகாலையில் தொடர்ந்து 45 நாட்கள் சாப்பிட்டு வர இளமையில் ஏற்படும் முதுமை தோற்றம் மறையும்.
கண்நோய்:
கீழாநெல்லி இலை, முக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து, கழற்சிக்காய் அளவு மோரில் கலந்து 45 நாட்கள் தொடர்ந்து குடித்துவர மாலைக்கண், பார்வை மங்கல், வெள்ளெழுத்து போன்ற பிரச்சினைகள் நீங்கும்.
சொறி, சிரங்கு, நமச்சல்:
கீழாநெல்லி இலையை மட்டும் சேகரித்து, அதனுடன் உப்பு சேர்த்து அரைத்து, உடலில் தடவி குளித்து வர சொறி, சிரங்கு நமைச்சல் போன்றவை படிப்படியாக குணமாகும்.
மாதவிடாய் பிரச்சினை:
கீழாநெல்லி வேர், அசோகப்பட்டை, அந்திப்பட்டை ஆகியவற்றை சம அளவு எடுத்து இடித்து தூள் செய்து, அதில் 10 கிராம் அளவு வீதம் காலை, மாலை வேளைகளில் வெந்நீருடன் கலந்து தொடர்ந்து 40 நாட்கள் உட்கொண்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும், வெள்ளைப்படுதல், மாதவிலக்கு தாமதம் ஆகுதல், அதிகப்படியான ரத்தப்போக்கு போன்றவை சீராகும்.
கல்லீரல் பிரச்சினை:
கீழாநெல்லியுடன் சம அளவில் கரிசலாங்கண்ணியை சேர்த்து அரைத்து பசுப்பாலுடன் 45 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பழுது, பாண்டு, சோகை, ரத்தமின்மை போன்ற பிரச்சினைகள் தீரும்.
No comments:
Post a Comment