ACUSIDDHA developed by Dr.V.Pandikumar MBA, MD (Acu)

Friday, October 8, 2010

தேன் - Honey


தேன் - Honey


தேன் இயற்கை அளித்த, இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு. எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதை யில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது. மேலும் தேனீக்கள் எந்தச் செடியிலிருந்து தேனைச் சேகரித்ததோ அந்தச் செடியின் மருத்துவக் குணத்தை அது பெற்று விடுகிறது. நோய் நீக்கும் மருந்தாக உயர்ந்த உணவாக தேன் உள்ளது. சித்தர் நூல்களில் பித்தம், வாந்தி, கப சம்பந்தமான நோய்கள், வாயுத் தொல்லை, இரத்தத்தில் உள்ள குற்றங்களை நீக்கி சுத்தம் செய்ய வல்லது தேன் என்று கூறப்பட்டுள்ளது. கொம்புத்தேன், மலைத்தேன், மரப்பொந்துத்தேன், மனைத்தேன், புற்றுத்தேன், புதியதேன், பழைய தேன் என ஏழு தேன் வகைகளையும், அவற்றின் மருத்துவ குணங்களையும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். மூலிகைகள், மரங்கள், செடி, கொடிகள் வளர்ந்து நிரம்பிய உயர்ந்த மலையிலிருந்து சேகரிக்கப்படும் மலைத்தேனில் மூலிகையின் மருத்துவக் குணமும் சேர்ந்து இருக்கும். இத்தேன் மருந்துடன் சேர்த்து உண்ணும் அனுபானத்திற்குச் சிறந்ததாக விளங்குகிறது. மருந்துகளைத்தேன் கலந்து கொடுப்பதால் ஜீரணப் பாதையில் வெகு சீக்கிரமாக மருந்து உறிஞ்சப்பட்டு விடும். இரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் செயல் புரியும். மருத்தின் வீரியம் குறையாமல் மருந்தால் வயிறு, குடல்களுக்கு ஏற்படும் பின் விளைவுகளை தேன் தடுத்து நிறுத்தும். தேன் சேர்த்து தயாரித்த மருந்துகள் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். மருந்தின் வீரியமும் கெடுவதில்லை. இந்திய மருத்துவ முறைகளில் தேன் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. சிறியவர் முதல் பெரியவர்வரை பொருந்தும் உணவும், மருந்தும்தேன்தான்.. தேனில் எளிமையாக ஜீரணமாகும் சர்க்கரை சத்துக்கள் இருப்பதால் கடும் உழைப்பாளிகள் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடுவோர் இடையிடையே தேன் கலந்த பானம் பருகலாம். தேனில் உள்ள சர்க்கரைச் சத்து வாயிலும், குடலிலும் வெகு சீக்கிரத்தில் உறிஞ்சப்பட்டு விடுகிறது. இதனால் உழைப்பின் களைப்பு நீங்கும். தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களைச் சீராக விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் படைத்தது. அதனால் இதய நோய் இதயத்தில் நுழையபயப்படும். எகிப்து நாட்டில் கண் நோய், தோல் நோய் மருத்துவத்தில் தேனைப் பயன்படுத்துகிறார்கள். ரஷ்ய நாட்டின் நாட்டுப்புற மருத்துவத்தில் தேன் முக்கிய இடம் வகிக்கிறது. தேனுடன் பிற உணவுப் பொருட்கள் தானியங்களை ஊற வைத்து உண்ணும் பழக்கம் ரஷ்ய நாட்டில் இன்னும் வழக்கத்தில் உள்ளது. தேனுடன், இஞ்சி, விதை நீக்கிய பேரீச்சம்பழம் இரண்டையும் ஊறவைத்து நம் நாட்டில் உட்கொள்வார்கள். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், மல பந்தம் நீங்கி, ஜீரணப்பாதை சீராகும். அரை டம்ளர் முதல் ஒரு சிறிய டம்ளர் அளவு (50 மி.லி முதல் 100 மி.லி.வரை) ஆறிய வெந்நீரில் அல்லது அதே அளவு கொதித்து ஆறிய பாலில் ஒரு டீஸ்பூன் முதல் மூன்று டீஸ்பூன்வரை தேன் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் அருந்துங்கள். குழந்தை முதல் வயதானோர்வரை தேனை உட்கொள் ளலாம். நோய் எதிர்ப்புத் தன்மை பெருகி உடல் ஆரோக்கியம் கிட்டும். படுக்கும் முன் தேன் அருந்தினால் நல்ல உறக்கத்தை நல்கும். இரத்த சோகையை அகற்ற: நாள்தோறும் 100 கிராம் தேன் கலந்த பானம் பருக வேண்டும். தினசரி 100 கிராம் அளவிற்கு மேல் தேன் உட் கொள்ளக்கூடாது. காலை 30 கிராம், மதியம் 40 கிராம், இரவு 30 கிராம் அளவாகப்பிரித்து உட்கொள்ள வேண்டும். ஏதாவதொரு பானத்துடன் சேர்த்து சுமார் ஆறு வாரம் அருந்தி வருவதால் இரத்தத்தில் இரத்த சிவப்பணு (ஹீமோகுளோபின்) அதிகரித்து இரத்த சோகை நீங்கும். மேலும் உடல் அழகையும், குரல் இனிமையையும் பெருக்கும் குணம் தேனிற்கு உண்டு. 100 கிராம் தேனில் சுமார் 355 உடற்சூடு தரும் கலோரிகள் உள்ளன. தேனை வயிற்றின் நண்பன் என்று குறிப்பிடலாம். ஒன்று முதல் மூன்று டீஸ்பூன் தேனை 100 மி.லி. ஆறிய வெந்நீருடன் கலந்து தினமும் காலை அல்லது இரவு நேரங்களில் வெறும் வயிற்றில் உணவு அருந்துவதற்கு முன் பருகி வருவதால் வயிற்றுப்புண், இரப்பை அழற்சி ஈரல், பித்தப்பை நோய்கள் குணமாகும். இரைப்பையில் தேவைக்கு அதிகமாக சுரக்கப்படும் அமிலத்தின் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் அமிலத்தால் வயிற்றுப் புண்ணிற்கு ஏற்படுத்தப்படும் தூண்டுதலைக் குறைத்து, எரிச்சல், வலியை நீக்கும். மேலும் நீர்த்தாரைப் புண், சிறுநீரக, இதய நோய்களையும் தடுக்க வல்லது தேன். தேனீ சேகரிக்கும் தேனில் சிறிதளவு மகரந்தமும் கலந்திருக்கும். பூக்களுக்குத் தக்கவாறு நாடு, காலத்திற்கு ஏற்றவாறும் தேனின் ருசி, மனம், குணம், தடிமன் வேறு படும். குடகு பகுதியில் கிட்டும் ஒரு வகைத் தேன் வெள்ளி நிறத்தில் ஜீனி (சர்க்கரை) கரைத்தது போல் இருக்கும். தேன் கூட்டை பிரித்து கையால் பிழித்தெடுக்கும் தேனில் புழு, பூச்சி, தூசி கலந்து இருக்கும். தேன் கூட்டிலிருந்து நேரடியாக ஒழுகும்போது சேகரிக்கப்படும் தேன் சுத்தமான முதல் தரமானது. சேகரிக்கப்பட்ட தேன் இனிப்பு சுவையுடன் தெளிவாக இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். நாளடைவில் மங்கிய நிறத்திற்கு மாறி விடும். சுமார் மூன்று மாதம் முதல் ஆறு மாதம் வரை தேனை வைத்திருந்து சாப்பிடலாம். பழைய தேனும் உட்கொள்ள உகந்த நிலையடைகிறது. நாள் பட வைத்திருந்தும் தேனை பயன்படுத்தலாம். நாள்பட்ட சுத்தமான தேனில் படிகம் ஏற்படும். இதனை நாட்டுப்புற மக்கள் விளைந்த தேன் என்பர். விளைந்த தேனையும் உட்கொள்ளலாம். தேனில் உள்ள சர்க்கரை சத்து, வைட்டமின் சத்து, உலோக சத்து உடலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. அபூர்வமாக சிலருக்கு தேனில் கலந்துள்ள மகரந்தமும், மெழுகும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். தேனில் சிறிதளவு தேன் மெழுகும் கலந்திருக்கும், தேன் மெழுகு உடலுக்கு நன்மை செய்ய வல்லது. தேன் மெழுகு உடலை மெருகேற்றும் தன்மையை பெற்றது. ஆயுளை நீட்டிக்கும் அறிய குணம் தேன் மெழுகிற்கு உண்டு. தேனிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவையான பானத்தை முனிவர்கள் முதல் தேவர்கள் வரை விரும்பி அருந்தி வந்தனர் என ரிக் வேதத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது. ரோமானியர்கள் மூல்லும் என்ற பானத்தையும், ரஷ்யர்கள் லிப்பிடெஸ் என்ற பானத்தையும், கிளாரி பிராகெட் என்ற சுவையான பானத்தை பிரிட்டிசாரும் உபயோகித்து வந்தனர். இவர்கள் உட்கொண்ட பானங்கள் அனைத்தும் தேன் கலந்து செய்யப்பட்டவை என்பதனை மேல் நாட்டு வரலாறு எடுத்துரைக்கிறது. தென் ஆப்பிரிக்காவிலும், கிழக்கு ஆப்பிரிக்கா நாட்டிலும் வாழும் சிதேசி இனப்பிரிவினர்கள் தேனிலிருந்து தயாரிக்கப்பட்ட பீர், ஒயின், மதுபான வகைகளை உற்சாகமாக உட்கொள்கிறார்கள். டெமோகிரிபியஸ் என்ற கிரேக்க தத்துவ ஞானி, நீண்ட நாள் உயிர் வாழ்ந்த ரகசியத்தை வெளியிட்டபோது அனைவரும் திகைப்படைந்தனர். நான் தினமும் வெந்நீரில் தேனை ஊற்றி அதில் எழும் ஆவியை முகர்ந்து வருகிறேன். இதனால் என்னை நோய் தாக்கத்திலிருந்து காத்துக் கொண்டேன் என்று கூறியிருக்கிறார். கீழ் ஆப்பிரிக்காவில் வாழும் வாசாமியா இனத்தவர்கள் தங்கள் சாதிப் பெண்கள் பிரசவித்த பின் தீட்டு நன்கு கழியும்வரை வெந்நீரில் தேன் கலந்து உணவாக அளித்து வருகிறார்கள். இதனால் பிரசவத்தில் ஏற்பட்ட அசதி நீங்குகிறது. முருகப் பெருமானின் பழனிமலை சன்னிதானத்தில் கிடைக்கும் பஞ்சாமிர் தத்தின் சுவையை நாடெங்கும் பரப்பியது இந்த தேன்தான். இங்கு வருடந்தோரும் வரும் பக்தர்கள் வீடு செல்லும்போது படைத்த பஞ்சாமிர்தம் இல்லாமல் செல்வதில்லை. இதனை தன் குடும்பத்தாருடன் உண்டு. சுற்றத்தாருக்கும் வழங்கி உடல் நலத்தை காப்பாற்றி வருகிறார்கள். உடல் நலமும் கிட்டுகிறது. பஞ்சாமிர்தத்தில் சேரும் பலாப்பழம் எய்ட்ஸ் நோயை எதிர்க்க உடலுக்கு பலன் தருவதாக லண்டனில் கண்டுபிடித் திருக்கிறார்கள். தேனில் கலப்படத்தை அறிய சில வழிகள் உள்ளன: சிறிதளவு தேனில் தீக்குச்சியை சில வினாடிகள் ஊறவிடுங்கள். மீண்டும் ஊறிய தீக்குச்சியை எடுத்து துடைத்து விட்டு தீப் பெட்டியில் பற்ற வைக்க வேண்டும். குச்சி சீக்கிரம் எரிந்தால் தேனில் சர்க்கரைக் கலப்படம் இல்லை என்பதை அறிய வேண்டும். மை உறிஞ்சும் காகிதத்தில் அல்லது செய்தி வெளியாகும் நாளிதழில் சிறிதளவு தேனை ஊற்றி, சில நிமிடங்கள் வைத்திருங்கள். காகிதத்தின் கீழே தேன் ஊறி இருக்கக் கூடாது. செய்தித்தாளில் தேன் ஊற்றிய இடத்தில் ஊறாவிடில் நல்லதேன். ஒரு கண்ணாடி டம்ளரில் முழுவதும் நீர் பரப்பி அதில் ஒரு தேக் கரண்டி தேனை மேலாக விடுங்கள். தேன் நீரில் கரையாமல் அடியில் சென்று தங்க வேண்டும். நீரில் கரையாவிடில் அது அசல் தேனாகும்.

No comments:

Post a Comment